Daily Readings

Mass Readings for
27 - Oct- 2025
Monday, October 27, 2025
Liturgical Year C, Cycle I
Monday of the Thirtieth week in Ordinary Time

திருப்பலி வாசகங்கள்
முதல் வாசகம்: Romans 8:12-17
பதிலுரைப் பாடல்: திருப்பாடல்கள் 68:2, 4, 6-7, 20-21
நற்செய்தி வாசகம்: லூக்கா 13:10-17

செபமாலை: மகிழ்வின் மறையுண்மைகள்


பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள்

First Reading: உரோமையர் 8:12-17
Responsorial Psalm: திருப்பாடல்கள் 68:2, 4, 6-7, 20-21
Gospel: லூக்கா 13:10-17

First Reading
உரோமையர் 8:12-17
கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 12-17

சகோதரர் சகோதரிகளே,

நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப்பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப்பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Responsorial Psalm
திருப்பாடல்கள் 68:2, 4, 6-7, 20-21
பல்லவி: ஆண்டவராம் நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்.

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்;
3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.
பல்லவி: ஆண்டவராம் நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்.

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!
6ab தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.
பல்லவி: ஆண்டவராம் நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்.

19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு.
20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.
பல்லவி: ஆண்டவராம் நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்.

Gospel
லூக்கா 13:10-17
ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில்

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.

இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்” என்றார்.

ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார்.

அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.