John - Chapter 20
Holy Bible

1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.
3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.
4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.
6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,
7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.
9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
10 பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
11 மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார்.
12 அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
13 அவர்கள் மரியாவிடம், ' அம்மா, ஏன் அழுகிறீர்? ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை ' என்றார்.
14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை.
15 இயேசு அவரிடம், ' ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்? ' என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ' ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன் ' என்றார்.
16 இயேசு அவரிடம், ' மரியா ' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ' ரபூனி ' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ' போதகரே ' என்பது பொருள்.
17 இயேசு அவரிடம், ' என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ' என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் ' எனச் சொல் ' என்றார்.
18 மகதலா மரியா சீடரிடம் சென்று, ' நான் ஆண்டவரைக் கண்டேன் ' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.
20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.
22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.
25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.
26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.
27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.
28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.
29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார்.
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.
31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

Holydivine