Jeremiah - Chapter 30
Holy Bible

1 ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:
2 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.
3 ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்: அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார்
4 இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:
5 ஆண்டவர் கூறுகின்றார்: திடுக்கிடச் செய்யும் ஒலியை நான் கேட்கின்றேன்: அது அச்சத்தின் ஒலி: சமாதானத்தின் ஒலி அன்று.
6 'ஆண்மகன் எவனாவது பிள்ளை பெற்றதுண்டா?' என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன்? எல்லா முகங்களும் மாறிவிட்டன: அவை வெளிறிப்போய்விட்டன!
7 அந்தோ! அந்த நாள் பெரிய நாள்: மற்றெந்த நாளும் அதைப் போன்றில்லை. யாக்கோபுக்கு அது வேதனையின் காலம்: ஆனால் அதனின்று அவன் விடுவிக்கப்பெறுவான்.
8 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்: அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.
9 அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!
10 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்: அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்: அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.
11 நான் உன்னோடு இருக்கின்றேன்: உன்னை மீட்பதற்காக உள்ளேன், என்கிறார் ஆண்டவர். எந்த மக்களினத்தார் இடையே நான் உன்னைச் சிதறடித்தேனோ அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்: உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன்: உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்: உன்னைத் தண்டிக்காமல் வி
12 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது: உனது புண் புரையோடிப்போனது.
13 உனக்காக வாதிட எவனும் இல்லை: உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை: உன்னைக் குணப்படுத்தவே முடியாது.
14 உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்: உன்னை அவர்கள் தேடுவதே இல்லை: மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்: கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்: ஏனெனில் உனது குற்றம் பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை.
15 நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்கமுடியாது: ஏனெனில் உனது குற்றமோ பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை: எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.
16 ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்: உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்: உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்: உன்னைச் சூறையாடுவோர் அனைவரும், நான் கையளிக்க, சூறையாடப்படுவர்.
17 நான் உனக்கு நலம் அளிப்பேன்: உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், தள்ளப்பட்டவள் என்று உன்னை அழைத்தார்கள்: இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர் , என்றார்கள்.
18 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்: அவனுடைய உறைவிடங்கள்மீது நான் இரக்கம் காட்டுவேன்: அவற்றின் இடிபாடுகள்மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்: அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும்.
19 அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்: மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்: அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்: இனி அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.
20 அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்: அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலை நாட்டப்படும்: அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன்.
21 அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்: அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்: அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்: அவனும் என்னை அணுகிவருவான்: ஏனெனில், என்னை அணுகிவர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர்.
22 நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்: நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
23 இதோ ஆண்டவரின் புயல்! அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும். அது தீயோரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும்.
24 ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி நிறைவேற்றாமல் அவரது வெஞ்சினம் திரும்பிவராது: வரவிருக்கும் நாள்களில் அதை நீங்கள் உணர்வீர்கள்.

Holydivine