Baruch - Chapter 1
Holy Bible

1 பாரூக்கு பாபிலோனில் இருந்தபொழுது இந்நூலை எழுதினார். பாரூக்கு நேரியாவின் மகன்: நேரியா மக்சேயாவின் மகன்: மக்சேயா செதேக்கியாவின் மகன்: செதேக்கியா அசதியாவின் மகன்: அசதியா இலக்கியாவின் மகன். 
2 கல்தேயர் எருசலேமைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கியபின், ஐந்தாம் ஆண்டில் மாதத்தின் ஏழாம் நாள் அவர் இந்நூலை எழுதினார். 
3 யோயாக்கிம் மகனும், யூதாவின் அரசனுமான எக்கோனியா முன்னிலையிலும், இந்நூலின் வாசகத்தைக் கேட்க வந்திருந்த உயர் குடிமக்கள், 
4 அரசின் மைந்தர்கள், மூப்பர், பெரியோர், சிறியோர், பாபிலோனில் சூது ஆற்றங்கரையில் குடியிருந்தோர் ஆகிய அனைவர் முன்னிலையிலும் பாரூக்கு இதனைப் படித்தார்.
5 அதற்குச் செவிசாய்த்த யாவரும் அழுது உண்ணா நோன்பிருந்தனர்: ஆண்டவர் திருமுன் வேண்டுதல் செய்தனர்.
6 மேலும், அவர்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை பணம் திரட்டி, அதை
7 எருசலேமில் இருந்த சல்லூம் பேரனும், இலக்கியாவின் மகனுமான யோயாக்கிம் என்னும் குருவுக்கும், அவரோடு எருசலேமில் இருந்த மற்ற குருக்களுக்கும், மக்கள் அனைவருக்கும் அனுப்பிவைத்தார்கள். 
8 அதே நேரத்தில், ஆண்டவரின் இல்லத்திலிருந்து கவர்ந்து செல்லப்பட்டிருந்த கலன்களை யூதா நாட்டிற்குத் திருப்பியனுப்பும் பொருட்டு, சீவான் மாதம் பத்தாம் நாள் பாரூக்கு எடுத்துவைத்திருந்தார். அவை யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான செதேக்கியாவால் செய்யப்பட்ட வெள்ளிக்கலன்களாகும்.
9 அவை பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எருசலேமிலிருந்து எக்கோனியா, தலைவர்கள், கைவினைஞர்கள், உயர்குடிமக்கள், நாட்டு மக்கள் ஆகியோரைப் பிடித்துப் பாபிலோனுக்கு நாடுகடத்தியபின் செய்யப்பட்டவை
10 அப்பொழுது அவர்கள் விடுத்த செய்தி வருமாறு: இத்துடன் நாங்கள் உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கின்றோம். அதைக்கொண்டு எரிபலி, பாவம்போக்கும் பலி, சாம்பிராணி, உணவுப் படையல் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுங்கள்: நம் கடவுளாகிய ஆண்டவருடைய பலி பீடத்தின்மீது அவற்றைப் படையுங்கள்.
11 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நல்வாழ்வுக்காகவும், அவருடைய மகன் பெல்சாட்சரின் நல்வாழ்வுக்காகவும் மன்றாடுங்கள். இதனால் மண்ணலகில் அவர்களது வாழ்வு விண்ணலக வாழ்வு போல நீடிக்கட்டும்.
12 ஆண்டவர் எங்களுக்கு வலிமையும் கண்களுக்கு ஒளியும் அருள்வார். நாங்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் பாதுபாப்பிலும் அவருடைய மகன் பெல்சாட்சரின் பாதுகாப்பிலும் வாழ்ந்து, அவர்களுக்கு நீண்ட நாள் பணிவிடை செய்து அவர்களது பரிவைப் பெறுவோம்.
13 நம் கடவுளாகிய ஆண்டவரிடம் எங்களுக்காகவும் மன்றாடுங்கள்: ஏனெனில், அவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம். அதனால் அவருடைய சினமும் சீற்றமும் இன்றுவரை எங்களைவிட்டு நீங்கவில்லை.
14 நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைக்கும் இந்நூலைத் திருவிழாக் காலத்திலும் சபை கூடும் நாள்களிலும் ஆண்டவரின் இல்லத்தில் நீங்கள் பொதுவில் படித்து, உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். 
15 அப்பொழுது நீங்கள் சொல்ல வேண்டியது: நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள்,
16 நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது.
17 ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம்.
18 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை: அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை: அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை.
19 நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்று வரை நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை: அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.
20 ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும்பொருட்டு, எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்துவந்தபொழுது, தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும் இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன.
21 மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை.
22 மாறாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்: வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்: நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.

Holydivine