Judges - Chapter 15
Holy Bible

1 சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார்.
2 அவள் தந்தை, நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா? அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாக இருக்கட்டும் என்றார்.
3 சிம்சோன் இம்முறை நான் பெலிஸ்தியருக்குத் தீமை செய்யும் பொழுது அவர்களின் முன் குற்றமற்றவன் என்றார்.
4 சிம்சோன் சென்று முந்நூறு நரிகளைப் பிடித்தார். அவர் தீப்பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரு வால்களுக்கு இடையே ஒரு தீப்பந்தமாக வைத்தார்.
5 பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முற்றிய பயிர்களிடையே நரிகளை அனுப்பினார். அவை தானியங்களையும், முற்றிய பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரித்தன.
6 பெலிஸ்தியர் இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன். ஏனெனில் திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான் என்றனர். எனவே பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர்.
7 சிம்சோன், நீங்கள் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.
8 அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார்.
9 பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர்.
10 யூதா மக்கள் அவர்களிடம், ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்? என்றனர். அதற்குப் பெலிஸ்தியர் சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம் என்றனர்.
11 யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம், பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா? ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்? என்றனர். அவர் அவர்களிடம், அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன் என்ற
12 அவர்கள் அவரிடம், உன்னைப் பிடித்துக் கட்டிப் பெலிஸ்தியர் கையில் ஒப்படைக்க நாங்கள் வந்துள்ளோம் என்றனர். சிம்சோன் அவர்களிடம், என்னைத் தாக்கமாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள் என்றார்.
13 அவர்கள் அவரிடம், இல்லை: நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம். நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம் என்றனர். அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர்.
14 அவர் இலேகியை நெருங்கி வருகையில், பெலிஸ்தியர் கூச்சலிட்டுக்கொண்டு அவரைக் காண வந்தனர். ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன.
15 அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார்.
16 சிம்சோன், கழுதைத் தாடையால் குவியல் குவியல்கள்! கழுதையின் தாடையால் கொன்றேன் ஆயிரம் பேரை என்றார்.
17 அவர் இதைச் சொல்லி முடித்ததும், தாடை எலும்பைத் தம் கையிலிருந்து வீசி எறிந்தார். அவ்விடத்தை இராமேத்து இலேகி என அழைத்தார்.
18 அவர் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி, நீர் உம் ஊழியன்மூலம் இம் மாபெரும் விடுதலையைத் தந்தீர். ஆனால் இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ? என்று மன்றாடினார்.
19 கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை ஏன்ககோரே என அழைத்தார்.
20 பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

Holydivine