Proverbs - Chapter 16
Holy Bible

1 எண்ணங்களை மனிதர் எண்ணலாம்: ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.
2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்: ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
3 உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை: அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.
4 ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு: பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.
5 இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்: அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்: இது உறுதி.
6 அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.
7 ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.
8 தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.
9 மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்: ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.
10 அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது: தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.
11 நிறைகோலும் துலாக்கோலும் ஆண்டவருக்கே உரியன: பையிலுள்ள எடைக்கற்களெல்லாம் அவரால் உண்டானவை.
12 தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்: ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.
13 நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்: நேறியவற்றைச் சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார். 
14 அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது: ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார். 
15 அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்: அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது. 
16 பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்: வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல். 
17 நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்: தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புடனிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். 
18 அழிவுக்கு முந்தியது அகந்தை: வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை. 
19 மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம். 
20 போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்: ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன். 
21 ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்: இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர். 
22 விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்: மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும். 
23 ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்: அவருடைய சொற்களை எவரும் ஏற்பர். 
24 இன்சொற்கள் தேன்கூடு போன்றவை: மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை. 
25 ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்: முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும். 
26 உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது: உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது. 
27 பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்: எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு. 
28 கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்: புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர். 
29 வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார். 
30 கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்: வாயை கொண்டிருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர். 
31 நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி: அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.
32 வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்: நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.
33 மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்: ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.

Holydivine