Proverbs - Chapter 28
Holy Bible

1 பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்: நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள்.
2 ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமைவாய்ந்ததாய் நிலைத்திருக்கும்: ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.
3 ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.
4 நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்: அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.
5 தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது: ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.
6 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.
7 அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்: ஊதாரிகளோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.
8 அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.
9 ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.
10 நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்: தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.
11 செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்: உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.
12 நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்: பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள். 
13 தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார். 
14 எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறு பெறுவார்: பிடிவாதமுள்ளவரோ தீங்கிற்கு உள்ளாவார். 
15 கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.
16 அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்: நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.
17 கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்: அவனை எவரும் தடுக்க வேண்டாம்.
18 நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது: தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.
19 உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்: வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.
20 உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்: விரைவிலேயே செல்வராகப் பார்க்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.
21 ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல: ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.
22 பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்: ஆனால் தாம் வறியவராகப்போவதை அவர் அறியார்.
23 முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.
24 பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, அது குற்றமில்லை என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.
25 பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்: ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.
26 தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்: ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.
27 ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது: அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார்.
28 பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்: அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.

Holydivine