Genesis - Chapter 20
Holy Bible

1 ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார். 
2 அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான். 
3 இரவில் ஆண்டவர் அபிமெலக்குக்குக் கனவில் தோன்றி, "இதோ, நீ அழைத்துவரச் செய்த பெண்ணின் பொருட்டு நீ சாகப் போகிறாய். ஏனெனில் அவள் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்" என்று அவனிடம் கூறினார். 
4 அதுவரை அவரைத் தொடாதிருந்த அபிமெலக்கு அது கேட்டு மறுமொழியாக, "என் தலைவரே, உண்மையாகவே நேர்மைமிக்க இனத்தவரை நீர் அழிப்பீரோ? 
5 அவன் அவளைத் தன் சகோதரி என்றும் அவள் அவனைத் தன் சகோதரன் என்றும் அறிமுகப்படுத்தவில்லையா? நான் நேரிய இதயத்தோடும் தூய கைகளோடும் இதைச் செய்தேன்" என்றான். 
6 கடவுள், கனவில் தோன்றி, அவனை நோக்கி, "நீ நேரிய இதயத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவேன். அதனால்தான் எனக்கு எதிராகப் பாவம் செய்யாத உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவிடவில்லை. 
7 உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு. ஏனெனில் அவன் ஓர் இறைவாக்கினன். அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவளை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி" என்றார். 
8 அபிமெலக்கு அதிகாலையில் எழுந்து தன் வேலைக்காரர் அனைவரையும் அழைத்து, அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் அச்சமுற்றனர். 
9 பின் அபிமெலக்கு ஆபிரகாமை வரவழைத்து, "நீர் எங்களுக்கு என்ன காரியம் செய்து விட்டீர்? எனக்கும் என் நாட்டுக்கும் இப்பெரும் பழி நேரும்படி நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன்? செய்திருக்கக் கூடாதவற்றை நீர் எனக்குச் செய்துவிட்டீரே! 
10 நீர் எக்காரணத்தைக் கொண்டு இக்காரியம் செய்தீர்?" என்ற அவரிடம் வினவினான். 
11 ஆபிரகாம் மறுமொழியாக, "இவ்விடத்தில் கடவுளுக்கு அஞ்சுவார் எவரும் இல்லையென்றும் என் மனைவியை அடையும்பொருட்டு என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன். 
12 மேலும், உண்மையில் இவள் என் சகோதரியே; இவள் என் தந்தைக்குப் பிறந்த மகள். ஆனால் என் தாயின் மகள் அல்ல: அவளை நான் மணந்து கொண்டேன். 
13 மேலும், நான் என் தந்தையின் வீட்டைவிட்டுக் கடவுள் என்னை அலைந்து திரியச் செய்தபோது, 'நீ எனக்குப் பேருதவி செய்ய வேண்டும்; நாம் செல்லுமிடமெல்லாம், நான் உன் சகோதரன் என்று சொல்' என்று அவளிடம் நான் கூறியிருந்தேன்" என்றார். 
14 அப்பொழுது அபிமெலக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரர், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்ததுமன்றி, அவர் மனைவி சாராவையும் அவரிடம் ஒப்படைத்தான். 
15 மேலும் அபிமெலக்கு, "இதோ உமக்கு முன்பாக எனது நாடு இருக்கிறது. உமக்கு எங்கு விருப்பமோ அங்கு நீர் வாழலாம்" என்றான். 
16 மேலும் சாராவை நோக்கி, "இதோ உன் சகோதரருக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்துள்ளேன். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும். அனைவர் பார்வையிலும் உன் பழி நீங்கிவிட்டது" என்றான். 
17 ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடவே, கடவுளும் அபிமெலக்கையும் அவன் மனைவியையும் அடிமைப் பெண்களையும் குணமாக்கி அவர்களுக்குப் பிள்ளைப்பேறு அளித்தார். 
18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடிகளாக்கியிருந்தார். 

Holydivine