Hosea - Chapter 12
Holy Bible

1 எப்ராயிம் காற்றை உண்டு, நாள் முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க ஓடுகிறான்: பொய்யும் வன்செயலும் அவனிடம் பெருகி விட்டன: அசீரியாவோடு உடன்படிக்கை செய்கின்றான்: எகிப்துக்கு எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.
2 ஆண்டவருக்கு யூதாவோடு வழக்கு ஒன்று உண்டு: யாக்கோபை அவன் தீய வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்: அவன் செயல்களுக்குத் தக்கபடி கைம்மாறு தருவார்.
3 யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே தமையனை முந்திக் கொண்டான்: பெரியவனாக வளர்ந்த பின்போ கடவுளோடு போராடினான்.
4 வான தூதரோடு போராடி வெற்றி கொண்டான்: கண்ணீர் சிந்தி, அவர் அருளை வேண்டிக்கொண்டான்: பெத்தேல் என்னுமிடத்தில் அவரை சந்தித்தான்: அவரும் அங்கே அவனுடன் பேசினார்.
5 அந்த ஆண்டவரே படைகளின் கடவுள்: ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.
6 ஆதலால், இஸ்ரயேலே! உன் கடவுளிடம் திரும்பி வா: இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி: எப்போதும் உன் கடவுளை நம்பிக் காத்திரு.
7 ஆனால், இஸ்ரயேல் கள்ளத்தராசைக் கையில் வைத்திருக்கும் கானானியன் போன்றவன்: அவன் கொடுஞ்செயல் புரியவே விரும்புகின்றான்.
8 எப்ராயிம், நான் பணக்காரனாகிவிட்டேன், எனக்கென்று செல்வம் சேர்த்துக்கொண்டேன் என்கிறான். ஆனால், அவனது செல்வம் எல்லாம் சேர்ந்தும்கூட அவனது தீச்செயலின் பழியை அகற்றாது!
9 எகிப்து நாட்டினின்று உன்னை அழைத்து வந்த நாள்முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: விழா நாள்களில்போல மறுபடியும் உன்னைக் கூடாரங்களில் வாழச் செய்வேன்.
10 இறைவாக்கினர்களிடம் பேசினேன்: நானே காட்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினேன்: இறைவாக்கினர் வாயிலாக உவமைகளில் பேசினேன்.
11 கிலயாதில் தீச்செயல் மலிந்திருப்பதால் அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்: கில்காலில் காளைகளைப் பலியிடுவதால் உழவுசால் அருகே இருக்கும் கற்குவியல்போல் அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.
12 யாக்கோபு ஆராம் நாட்டிற்குத் தப்பி ஓடினான்: இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக ஊழியம் செய்தான்: அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.
13 இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். இறைவாக்கினர் ஒருவரால் அவன் பாதுகாக்கப்பட்டான்.
14 எப்ராயிம் ஆண்டவருக்கு மிகவும் சினமூட்டினான்: அவனுடைய தலைவர் அவனுடைய இரத்தப் பழியை அவன் மேலேயே சுமத்துவார்: அவனுடைய நிந்தையை ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.

Holydivine