Numbers - Chapter 24
Holy Bible

1 இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்போது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.
2 பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.
3 அவர் திருஉரையாகக் கூறியது: பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
4 கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி!
5 யாக்கோபே! உன் கூடாரங்களும் இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை!
6 அவை விரிந்து கடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை: ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை: நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை.
7 அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்: அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்: அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்: அவனது அரசு உயர்த்தப்படும்.
8 கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்: காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு: அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்: அவர்கள் எலும்புகளைத் தூள் தூள்களாக நொறுக்குவான்: அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்:
9 அவன் துயில் கொண்டான்: சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்: அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்: எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!
10 எனவே பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்: ஆனால் நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்:
11 எனவே உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்: உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன் என்று சொல்லியிருந்தேன்: ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார் என்றான்.
12 பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?
13 பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது: ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?
14 இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்: வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன் என்றார்.
15 அவர் திரு உரையாகக் கூறியது: பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
16 கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றலுடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி!
17 நான் அவரைக் காண்பேன்: ஆனால் இப்போதன்று: நான் அவரைப் பார்ப்பேன்: ஆனால் அண்மையிலன்று: யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்! அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்: சேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும்.
18 அவன் எதிரியான ஏதோம் பாழாகிவிடும்: சேயிரும் கைப்பற்றப்படும்: இஸ்ரயேலோ வலிமையுடன் செயல்படும்.
19 யாக்கோபு ஆளுகை செய்வான்: நகர்களில் எஞ்சியிருப்போர் அழிக்கப்படுவர்.
20 பின் அவர் அமலேக்கைப் பார்த்துத் திருவுரையாகக் கூறியது: வேற்றினங்களில் முதன்மையானவன் அமலேக்கு: இறுதியில் அவன் அழிந்துபோவான்.
21 அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாக் கூறியது: உன் வாழ்விடம் உறுதியானது: உன் கூடு பாறையில் அமைந்துள்ளது:
22 ஆயினும் கேனியன் பாழாய்ப் போவான்: ஆசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்?
23 பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது: அந்தோ, கடவுள் இதனைச் செய்யும்போது எவன்தான் பிழைப்பான்?
24 கித்திம் தன் கப்பல்களால் ஆசீரியாவையும் ஏபேரையும் துன்புறுத்துவான்
25 பின்பு பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்: பாலாக்கும் தன்வழியே சென்றான்!

Holydivine