Numbers - Chapter 25
Holy Bible

1 இஸ்ரயேல் சித்திமில் தங்கியிருந்தபோது மக்கள் மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடக்கத் தொடங்கினர்.
2 அவர்கள் தங்கள் தெய்வங்களின் பலிகளில் பங்கேற்க மக்களை அழைத்தனர்: மக்கள் உண்டு அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர்.
3 இங்ஙனம் இஸ்ரயேல் பாகால்பெகோரை அடிபணிந்தது: எனவே ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது.
4 ஆண்டவர் மோசேயிடம், மக்களின் தலைவர்கள் அனைவரையும் கொண்டு வந்து பட்டப்பகலில் ஆண்டவர் முன் தூக்கிலிடு. அதனால் ஆண்டவர் கடுஞ்சினம் இஸ்ரயேலை விட்டு நீங்கும் என்று கூறினார்.
5 மோசே இஸ்ரயேலின் தலைவர்களிடம், உங்கள் ஒவ்வொருவரும் பாகால் பெகோரை அடிபணிந்த தம் ஆள்களைக் கொன்று விடுங்கள் என்றார்.
6 மேலும் இஸ்ரயேல் மக்கள் சந்திப்புக் கூடார வாயிலில் அழுது கொண்டிருந்தபொழுது அவர்களில் ஒருவன் மிதியானியப் பெண்ணொருத்தியைத் தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான்: இது மோசேயின் பார்வையிலும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவர் பார்வையிலும் நடந்தது.
7 குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இதனைப் பார்த்ததும் அவன் மக்கள் கூட்டமைப்பை விட்டு எழுந்து தன் கையில் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.
8 அவன் அந்த இஸ்ரயேல் மனிதனின் பின்னே உள்ளறைக்குச் சென்று அந்த இஸ்ரயேல் மனிதனையும் அந்தப் பெண்ணையும் சேர்த்து அவள் வயிறு வழியே ஊடுருவக் குத்தினான். இதனால் இஸ்ரயேல் மக்களிடையே கொள்ளைநோய் அகன்றது.
9 எனினும் அக்கொள்ளை நோயால் இறந்தோர் இருபத்து நான்காயிரம் பேர்.
10 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
11 குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இஸ்ரயேல் மக்களிடமிருந்து என் சினத்தை அகற்றி விட்டான்: நான் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பின் வெறியை அவனும் காட்டிவிட்டான்: ஆகவே என் பேரார்வத்தால் இஸ்ரயேல் மக்களை நான் முற்றிலும் அழித்து விடவில்லை.
12 எனவே நீ சொல்ல வேண்டியது: இதோ என் நல்லுறவு உடன்படிக்கையை அவனுக்குக் கொடுக்கிறேன்:
13 அது அவனுக்கும் அவனுக்குப் பின் அவன் வழித்தோன்றல்களுக்கும் நிலையான குருத்துவத்தின் உடன்படிக்கையாயிருக்கும்: அவன் தன் கடவுள் மீது பேரார்வம் கொண்டிருந்ததால் இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தான்.
14 மிதியானியப் பெண்ணுடன் சேர்த்துக் கொல்லப்பட்ட இஸ்ரயேலன் பெயர் சிம்ரி: இவன் சிமியோன் குலத்தைச் சார்ந்த மூதாதையர் வீட்டுத் தலைவனான சாலூவின் மகன்:
15 கொல்லப்பட்ட அந்த மிதியானியப் பெண்ணின் பெயர் கோசுபி: இவள் மிதியானில் மூதாதையர் வீடொன்றுக்குத் தலைவனான சூரின் மகள்.
16 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
17 மிதியானியரைத் தாக்கி அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்:
18 ஏனெனில், அவர்களும் தங்கள் சூழ்ச்சிகளால் உங்களை ஏமாற்றினார்கள்: இதனால் பெகோரை முன்னிட்டு மிதியான் தலைவனின் மகளாகிய அவர்கள் சகோதரி கோசுபியின் காரியத்திலும் அவர்கள் உங்களைக் கெடுத்து விட்டார்கள். பெகோரை முன்னிட்டு ஏற்பட்ட கொள்ளை நோய்க் காலத்தில் அவள் கொல்லப்பட்டாள்

Holydivine