Isaiah - Chapter 14
Holy Bible

1 ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்துகொள்வார்: அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்டவரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள்.
2 மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்: தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்: அவர்களை ஒடுக்கி
3 ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில்,
4 பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு: ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே!
5 தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார்.
6 அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்: பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள்.
7 மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது: மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது.
8 தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும் உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன: 'நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல் எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை' எனப் பாடுகின்றன.
9 நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது: உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது.
10 அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!
11 உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன: புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்! பூச்சிகள் உன் போர்வையாகும்! 
12 வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!
13 'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்: இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்: வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.
14 மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே!
15 ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்: படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே!
16 உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, 'மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,
17 பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?' என்பர். 
18 மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில் மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.
19 நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்: வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய்.
20 கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்: ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்: உன் மக்களைக் கொன்று போட்டாய்: தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும்.
21 மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்: நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது: பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது. 
22 அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன் என்கிறார் படைகளின் ஆண்டவர், பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
23 அந்நாட்டை முள்ளம்பன்றிகளின் இடமாக்குவேன்: சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையாக்குவேன்: அழிவு என்னும் துடைப்பத்தால் முற்றிலும் துடைத்துவிடுவேன் என்கிறார் படைகளின் ஆண்டவர்.
24 படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்: நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்: நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.
25 என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்: என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்: அப்பொழுது அவனது நுகத்தடி அவர்களைவிட்டு அகலும்: அவன் வைத்த சுமை அவர்கள் தோளிலிருந்து இறங்கும்.
26 மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே: பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.
27 படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைக்க வல்லவன் எவன்? அவர் தம் கையை ஓங்கியிருக்க அதை மடக்கக்கூடியவன் எவன்?
28 ஆகாசு அரசன் இறந்த ஆண்டில் இந்தத் திருவாக்கு அருளப்பட்டது.
29 பெலிஸ்திய நாட்டின் அனைத்து மக்களே, உங்களை அடித்த கோல் முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்: ஏனெனில் பாம்பின் வேரினின்று கட்டுவிரியன் புறப்பட்டு வரும்: அதன் கனியாகப் பறவைநாகம் வெளிப்படும்.
30 ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்: வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்: உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன், உன்னில் எஞ்சியிருப்போரை நான் கொன்றொழிப்பேன்.
31 வாயிலே, வீறிட்டு அழு: நகரே, கதறியழு: எல்லாப் பெலிஸ்திய மக்களே: மனம் பதறுங்கள், ஏனெனில் வடபுறத்திலிருந்து புகையெனப் படை வருகின்றது. அதன் போர்வீரருள் கோழை எவனும் இல்லை.
32 அந்த நாட்டுத் தூதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்? சீயோனுக்கு அடித்தளமிட்டவர் ஆண்டவர்: அவர்தம் மக்களுள் துயருறுவோர் அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே.

Holydivine