Wisdom - Chapter 15
Holy Bible

1 எங்கள் கடவுளே, நீர் பரிவும் உண்மையும் பொறுமையும் உள்ளவர்: அனைத்தையும் இரக்கத்துடன் ஆண்டுவருகின்றீர்.
2 நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே: ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்: ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம்.
3 உம்மை அறிதலே நிறைவான நீதி: உமது ஆற்றலை அறிதலே இறவாமைக்கு ஆணிவேர்.
4 தீய நோக்குடைய மனிதரின் திறமைகள் எங்களைத் திசைதிருப்பிவிடவில்லை: ஓவியரின் பயனற்ற உழைப்பாகிய பல வண்ணம் தீட்டிய உருவமும் எங்களை ஏமாற்றிவிடவில்லை.
5 அறிவிலிகள் அவற்றின்மீது பேராவல் கொள்ளுமாறு அவற்றின் தோற்றமே தூண்டி விடுகிறது. அதனால் செத்துப்போன சாயலின் உயிரற்ற உருவத்தை அவர்கள் விரும்புகிறார்கள்.
6 அவற்றைச் செய்பவர்களும் அவற்றின்மீது ஆவல் கொள்பவர்களும் அவற்றை வணங்குபவர்களும் தீமையை விரும்புகிறார்கள்: இத்தகைய சிலைகளில் அவர்கள் நம்பிக்கைகொள்ளத் தகுந்தவர்களே.
7 குயவர்கள் வருந்தி உழைத்து, மென்மையான களிமண்ணைப் பிசைந்து, நம்முடைய தேவைக்காக ஒவ்வொரு மண்கலத்தையும் வனைகிறார்கள்; ஒரே மண்ணைக் கொண்டுதான் நல்ல வகையிலும் மாறான வகையிலும் பயன்படுகிற கலங்களைச் செய்கிறார்கள்; இவற்றில் ஒவ்வொன்றும் எவ்வகையில் பயன்படவேண்டும் என்பதைக் குயவர்களே முடிவு செய்கிறார்கள்.
8 வீணில் உழைத்து அதே களிமண்ணால் பயனற்ற தெய்வம் ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களே சிறிது காலத்திற்குமுன் அதே மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்; சிறிது காலத்திற்குப்பின், தங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட ஆன்மாக்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டியபொழுது, அவர்கள் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டிருந்தார்களோ அந்த மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள். 
9 ஆனால் தாம் சாகவேண்டும் என்பதைப் பற்றியோ, தம் வாழ்நாள் குறுகியது என்பதைப்பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. மாறாக, பொன், வெள்ளியில் வேலை செய்பவர்களுடன் போட்டியிடுகிறார்கள். வெண்கலத்தில் வேலை செய்கிறவர்களைப்போலச் செய்ய முயல்கிறார்கள்; போலித் தெய்வங்களின் சிலைகளைச் செய்வதில் பெருமை கொள்கிறார்கள். 
10 அவர்களுடைய இதயம் வெறும் சாம்பல். அவர்களது நம்பிக்கை புழுதியிலும் கீழானது. அவர்களது வாழ்க்கை களிமண்ணினும் இழிவானது.
11 ஏனெனில் தங்களை உருவாக்கியவரும் தங்களுக்குள் ஆற்றல்மிக்க ஆன்மாவைப் புகுத்தியவரும் உயிர்மூச்சை ஊதியவரும் யார் என்று அவர்கள் அறியவில்லை.
12 அவர்களோ நம் வாழ்க்கையை ஒருவகை விளையாட்டாகவும், நம்முடைய வாழ்நாளைப் பணம் சேர்க்கக் கூடிய ஒரு திருவிழாச் சந்தையாகவும் கருதுகிறார்கள்: ஏனெனில் ஒருவர் எவ்வழியாலும் ஏன், தீய வழியாலுங்கூட, பணம் சேர்க்கவேண்டும் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்.
13 உடையக்கூடிய மண்கலங்களையும் வார்ப்புச் சிலைகளையும் அவர்கள் செய்யும்போது தாங்கள் பாவம் செய்வதை மற்றெல்லாரையும்விட நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
14 உம் மக்களை ஒடுக்கிய பகைவர்கள் அனைவரும் மற்ற யாவரினும் அறிவிலிகள்: சிறு குழந்தைகளைவிட இரங்குதற்குரியவர்கள்.
15 ஏனெனில் வேற்றினத்தாரின் சிலைகள் கண்களால் காணவோ, மூக்கினால் மூச்சு விடவோ, காதுகளால் கேட்கவோ, விரல்களால் தொட்டுணரவோ, கால்களால் நடக்கவோ முடியாதபோதிலும் அவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று இவர்கள் எண்ணினார்கள்.
16 அவற்றைச் செய்தவர்கள் வெறும் மனிதர்களே: அவற்றை உருவாக்கியவர்கள் தங்களது உயிரைக் கடனாகப் பெற்றவர்கள். ஆனால் தங்களுக்கு இணையான ஒரு தெய்வத்தை எந்த மனிதரும் உருவாக்க முடியாது.
17 அவர்களோ சாகக்கூடியவர்கள். நெறிகெட்ட தங்கள் கைகளால் அவர்கள் செய்வது உயிரற்றதே! தாங்கள் வணங்குகிற சிலைகளைவிட அவர்கள் மேலானவர்கள்: ஏனெனில் அவர்களுக்கு உயிர் உண்டு: அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.
18 மேலும், உம் மக்களின் பகைவர்கள் மிகவும் அருவருப்பான விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்: அறிவின்மையை வைத்து ஒப்பிடும் போது, இவை மற்றவற்றைவிடத் தாழ்ந்தவை.
19 விலங்குகள் என்னும் அளவில்கூட, மனிதர்கள் விரும்பும் அழகு அவற்றின் தோற்றத்தில் இல்லை. இறைவன் தம் படைப்பைப் பாராட்டி ஆசி வழங்கியபொழுது, அவை ஒதுங்கிப் போய்விட்டன.

Holydivine