Wisdom - Chapter 17
Holy Bible

1 உம் தீர்ப்புகள் மேன்மையானவை, விளக்கமுடியாதவை. எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத மனிதர்கள் நெறிதவறினார்கள்.
2 நெறிகெட்டவர்கள் உமது தூய மக்களினத்தை அடிமைப்படுத்த எண்ணியபோது அவர்களே காரிருளின் அடிமைகளாகவும் நீண்ட இரவின் கைதிகளாகவும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு, உமது முடிவில்லாப் பாதுகாப்பினின்று கடத்தப்பட்டார்கள்.
3 மேலும் மறதி என்னும் இருள் அடர்ந்த திரைக்குப் பின்னால் தங்கள் மறைவான பாவங்களில் மறைந்துகொண்டதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் அச்சத்தால் நடுங்கியவர்களாய் கொடிய காட்சிகளால் அதிர்ச்சியுற்றுச் சிதறுண்டார்கள்.
4 அவர்கள் பதுங்கியிருந்த உள்ளறைகள்கூட அவர்களை அச்சத்திலிருந்து விடுவிக்கவில்லை. அச்சுறுத்தும் பேரொலிகள் எங்கும் எதிரொலித்தன. வாடிய முகங்கள் கொண்ட துயர ஆவிகள் தோன்றின.
5 எந்த நெருப்பின் ஆற்றலாலும் ஒளி கொடுக்க இயலவில்லை: விண்மீன்களின் ஒளி மிகுந்த கூடர்களாலும் இருள் சூழந்த அவ்விரவை ஒளிர்விக்க முடியவில்லை.
6 தானே பற்றியெரிந்து அச்சுறுத்தும் தீயைத் தவிர வேறு எதுவும் அவர்கள்முன்னால் தோன்றவில்லை. அவர்களோ நடுக்கமுற்று, தாங்கள் காணாதவற்றைவிடக் கண்டவையே தங்களை அச்சுறுத்துவன என்று உணர்ந்தார்கள்.
7 மந்திரவாதக் கலையின் மாயங்கள் தாழ்வுற்றன. அவர்கள் வீண்பெருமை பாராட்டிய ஞானம் வெறுப்புடன் கண்டிக்கப்பட்டது.
8 நோயுற்ற உள்ளத்திலிருந்து அச்சத்தையும் குழப்பத்தையும் விரட்டியடிப்பதாக உறுதிகூறியவர்களே நகைப்புக்கிடமான அச்சத்தினால் நோயுற்றார்கள்.
9 தொல்லை தரக்கூடிய எதுவும் அவர்களை அச்சுறுத்தவில்லை எனினும், கடந்து செல்லும் விலங்குகளாலும் சீறும் பாம்புகளாலும் அவர்கள் நடுக்கமுற்றார்கள். எவ்வகையிலும் தவிர்க்கமுடியாத காற்றைக்கூட
10 ஏறிட்டுப் பார்க்க மறுத்து, அச்ச நடுக்கத்தால் மாண்டார்கள்.
11 கயமை தன்னிலே கோழைத்தனமானது. தானே தனக்கு எதிராகச் சான்று பகர்கிறது: மனச்சான்றின் உறுத்தலுக்கு உள்ளாகி இடர்களை எப்பொழுதும் மிகைப்படுத்துகிறது.
12 அச்சம் என்பது பகுத்தறிவின் துணையைக் கைவிடுவதே.
13 உதவி கிடைக்கம் என்னும் எதிர்பார்ப்புக் குன்றும்போது, துன்பத்தின் காரணம் அறியாத நிலையை உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.
14 உண்மையிலேயே வலிமை சிறிதும் இல்லாததும், ஆற்றலற்ற கீழுலகின் ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான இரவு முழுவதும் அவர்கள் யாவரும் அமைதியற்ற உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
15 சில வேளைகளில் மாபெரும் பேயுருவங்கள் அடிக்கடி தோன்றி அவர்களை அச்சுறுத்தின: மற்றும் சில வேளைகளில் அவர்களது உள்ளம் ஊக்கம் குன்றிச் செயலற்றுப் போயிற்று. ஏனெனில் எதிர்பாராத திடீர் அச்சம் அவர்களைக் கலங்கடித்தது.
16 அங்கு இருந்த ஒவ்வொருவரும் கீழே விழுந்தனர்: கம்பிகள் இல்லாச் சிறையில் அடைபட்டனர்.
17 ஏனெனில் உழவர், இடையர், பாலை நிலத்தில் பாடுபடும் தொழிலாளர் ஆகிய அனைவரும் அதில் அகப்பட்டுத் தவிர்க்க முடியாத முடிவை எதிர்கொண்டனர்: ஏனெனில் அவர்கள் அனைவரும் இருள் என்னும் ஒரே சங்கிலியால் கட்டுண்டனர்.
18 காற்றின் ஒலி, படர்ந்த கிளைகளிலிருந்து வரும் பறவைகளின் இனிய குரல், பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும் வெள்ளத்தின் சீரான ஓசை, பெயர்த்துக் கீழே தள்ளப்படும் பாறைகளின் பேரொலி,
19 கண்ணுக்குப் பலப்படாதவாறு தாவி ஓடும் விலங்குகளின் பாய்ச்சல், கொடிய காட்டு விலங்குகளின் முழக்கம், மலைக் குடைவுகளிலிருந்து கேட்கும் எதிரொலி ஆகிய அனைத்தும் அவர்களை அச்சத்தால் முடக்கிவிட்டன.
20 உலகெல்லாம் ஒளி வெள்ளத்தில் திளைத்து, தன் வேலையில் தடையின்றி ஈடுபட்டிருந்தது.
21 இவ்வாறிருக்க, எகிப்தியர்கள்மேல் மட்டும் அடர்ந்த காரிருள் கவிந்து படர்ந்தது. அவர்களை விழுங்கக் குறிக்கப்பட்ட இருளின் சாயல் அது. எனினும் அவர்களே இருளைவிடத் தங்களுக்குத் தாங்க முடியாத சுமையாய் இருந்தார்கள்.

Holydivine