Wisdom - Chapter 4
Holy Bible

1 ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும், நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது: நற்பண்பின் நினைவு என்றும் அழியாதது: அது கடவுளாலும் மனிதராலும் கண்டுணரப்படும்.
2 அந்நினைவு பசுமையாய் இருக்கும்பொழுது மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்: அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர். மாசற்ற பரிசுகளுக்காக நற்பண்பு போராடி, வெற்றி வாகை சூடி, காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.
3 இறைப்பற்றில்லாதவர்கள் எண்ணற்ற பிள்ளைகளை ஈன்றபோதிலும் அவர்கள் தளிர்ப்பதில்லை: மணவாழ்க்கைக்குப் புறம்பே பிறந்த வழிமரபு ஆழமாய் வேரூன்றுவதில்லை: உறுதியாய் நிற்பதுமில்லை.
4 சிறிது காலம் அவர்கள் கிளைவிட்டுச் செழித்தாலும், உறுதியற்றவர்களாய்க் காற்றினால் அலைக்கழிக்கப்படுவார்கள்: காற்றின் சீற்றத்தால் வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.
5 அவர்களுடைய கிளைகள் வளர்ச்சி அடையுமுன்பே முறிக்கப்படும். அவர்களுடைய கனிகள் பயனற்றவை: உண்பதற்கு ஏற்ற அளவு பழுக்காமையால் அவை பாழாய்ப் போகும்.
6 முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே தீர்ப்பு நாளில் தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச் சாட்சிகளாய் இருப்பார்கள்.
7 நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும், இளைப்பாற்றி அடைவார்கள்.
8 முதுமையின் மதிப்பு நீடிய வாழ்வினால் வருவதன்று: ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று.
9 ஞானமே மனிதர்க்கு உண்மையான நரைதிரை: குற்றமற்ற வாழ்க்கையே உண்மையான பழுத்த முதுமை.
10 நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி, அவருடைய அன்பைப் பெற்றார்: பாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே அவரால் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
11 தீமை அவரது அறிவுக்கூர்மையைத் திசைதிருப்பாமல் இருக்கவும், வஞ்சகம் அவரது உள்ளத்தை மாசுபடுத்தாமல் இருக்கவுமே அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
12 தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்துவிடுகிறது: அலைக்கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்துவிடுகிறது.
13 அந்த நீதிமான் குறுகிய காலத்தில் நிறைவு எய்தினார்: நீண்ட வாழ்வின் பயனை அடைந்தார்.
14 அவரது ஆன்மா ஆண்டவருக்கு ஏற்புடையதாய் இருந்தது. தீமை நடுவினின்று ஆண்டவர் அவரை விரைவில் எடுத்துக் கொண்டார்.
15 மக்கள் இதைப் பார்த்தார்கள்: ஆனால் புரிந்துகொள்ளவில்லை. ஆண்டவர் தாம் தேர்ந்துகொண்டோர்மீது அருளும் இரக்கமும் காட்டுகின்றார்: தம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார் என்பதை அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.
16 இறந்துபோன நீதிமான்கள் உயிர் வாழ்கின்ற இறைப்பற்றில்லாதவர்களைக் கண்டனம் செய்வார்கள்: விரைவில் பக்குவம் அடைந்த இளைஞர்கள் நீண்ட நாள் வாழும் தீய முதியவர்களைக் கண்டனம் செய்வார்கள்.
17 இறைப்பற்றில்லாதவர்கள் ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்; ஆனால் ஆண்டவர் அவர்களுக்காக எத்தகைய திட்டம் வகுத்துள்ளார் என்றும், எந்த நோக்கத்திற்காக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளார் என்றும், அறிந்துகொள்ளமாட்டார்கள். 
18 அவர்கள் ஞானிகளை கண்டு ஏளனம் செய்வார்கள். ஆண்டவரோ அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவார்.
19 ஏனெனில் இனி அவர்கள் இழிந்த பிணம் ஆவார்கள்; இறந்தோர் நடுவில் என்றென்றும் அருவருப்புக்குரியோர் ஆவார்கள். ஆண்டவர் அவர்களைப் பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்; அடியோடு கலங்கவைப்பார். அவர்கள் முழுவதும் அழித்தொழிக்கப்படுவார்கள்; ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள். அவர்களின் நினைவுகூட மறைந்துவிடும். 
20 இறைப்பற்றில்லாதவர்களின் பாவங்களைக் கணக்கிடும்போது, அவர்கள் நடுங்கிக்கொண்டு வருவார்கள்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் அவர்களுக்கு எதிராக நின்று குற்றம்சாட்டும்.

Holydivine