Job - Chapter 27
Holy Bible

1 யோபு தமது உரையைத் தொடர்ந்து கூறியது:
2 என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை! அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்: எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார்.
3 என் உடலில் உயிர் இருக்கும்வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,
4 என் உதடுகள் வஞ்சகம் உரையா: என் நாவும் பொய்யைப் புகலாது.
5 நீங்கள் சொல்வது சரியென ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். சாகும்வரையில் என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.
6 என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்: விடவே மாட்டேன்: என் வாழ்நாளில் எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.
7 என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்: என் எதிரிகள் நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.
8 கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து, அவர்களின் உயிரைப் பறிக்கும்போது, அவர்களுக்கு என்ன நம்பிக்கை?
9 அவர்கள்மேல் கேடுவிழும்போது இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?
10 எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை அவர்கள் நாடுவார்களா? கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?
11 இறைவனின் கைத்திறனை நான் உங்களுக்குக் கற்பிப்பேன்: எல்லாம் வல்லவரின் திட்டங்களை மறைக்கமாட்டேன்.
12 இதோ! நீங்கள் யாவருமே இதைக் கண்டிருக்கின்றீர்கள்: பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?
13 இதுவே கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு: பொல்லாதவர் எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.
14 அவர்களின் பிள்ளைகள் பெருகினும் வாளால் மடிவர்: அவர்களின் வழிமரபினர் உண்டு நிறைவடையார்.
15 அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்: அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.
16 மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்: அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.
17 ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்: மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.
18 சிலந்தி கூடு கட்டுவதுபோலும், காவற்காரன் குடில் போடுவதுபோலும் அவர்கள் வீடு கட்டுகின்றனர்.
19 படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்: ஆனால் இனி அவ்வாறு இராது: கண் திறந்து பார்க்கின்றனர்: செல்வம் காணாமற் போயிற்று.
20 திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்: சுழற்காற்று இரவில் அவர்களைத் தூக்கிச் செல்லும்.
21 கீழைக் காற்று அவர்களை அடித்துச் செல்லும்: அவர்களின் இடத்திலிருந்து அவர்களைப் பெயர்த்துச் செல்லும்:
22 ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்: அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.
23 அவர்களைப் பார்த்து அது கைகொட்டி நகைக்கும்: அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.

Holydivine