Psalms - Chapter 149
Holy Bible

1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 
2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! 
3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 
4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். 
5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 
6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும். 
7 அவர்கள் வேற்றினத்தாரிடம் பழிதீர்த்துக் கொள்வார்கள்; மக்களினங்களுக்கு தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்; 
8 வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்; உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள். 
9 முன்குறித்து வைத்த தீர்ப்பை அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்; இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா! 

Holydivine