Psalms - Chapter 25
Holy Bible

1 ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
2 என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.
3 உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;
6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.
10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.
12 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்து கொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.
13 அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;
15 என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன; அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.
16 என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன்.
17 என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.
18 என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
19 என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்!
20 என் உயிரைக் காப்பாற்றும்: என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும்.
21 வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.
22 கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.

Holydivine