Psalms - Chapter 68
Holy Bible

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்;
2 புகை அடித்துச் செல்லப்படுவது போல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போலக் கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.
3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.
4 கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுங்கள்; மேகங்கள்மீது வருகிறவரை வாழ்த்திப் பாடுங்கள்; 'ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்; அவர்முன் களிகூருங்கள்.
5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!
6 தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்; ஆனால், அவருக்கு எதிராகக் கிளம்புவோர் வறண்ட நிலத்தில் வாழ்வர்.
7 கடவுளே! நீர் உம்முடைய மக்கள் முன்சென்று பாலைவெளியில் நடைபோட்டுச் செல்கையில், (சேலா)
8 சீனாயின் கடவுள் வருகையில், பூவுலகு அதிர்ந்தது; இஸ்ரயேலின் கடவுள் வருகையில் வானம் மழையைப் பொழிந்தது.
9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்.
11 என் தலைவர் செய்தி அறிவித்தார்; அச்செய்தியைப் பரப்பினோர் கூட்டமோ பெரிது;
12 'படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள் புறங்காட்டி ஓடினார்கள்'! வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் கொள்ளைப்பொருள்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
13 நீங்கள் தொழுவங்களின் நடுவில் படுத்துக்கொண்டீர்களோ? வெள்ளியால் மூடிய புறாச் சிறகுகளும், பசும்பொன்னால் மூடிய அதன் இறகுகளும் அவர்களுக்குக் கிடைத்ததே!
14 எல்லாம் வல்லவர் அங்கே அரசர்களைச் சிதறடித்தபோது, சல்மோன் மலையில் பனிமழை பெய்தது.
15 ஓ மாபெரும் மலையே! பாசானின் மலையே! ஓ கொடுமுடி பல கொண்ட மலையே! பாசானின் மலையே!
16 ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே! கடவுள் தம் இல்லமாகத் தேர்ந்துகொண்ட இந்த மலையை நீ ஏன் பொறாமையோடு பார்க்கின்றாய்? ஆம், இதிலேதான் ஆண்டவர் என்றென்றும் தங்கி இருப்பார்.
17 வலிமைமிகு தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம் கொண்ட என் தலைவர் சீனாய் மலையிலிருந்து தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார்.
18 உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்; சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றீர்; மனிதரிடமிருந்தும் எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும் பரிசுகள் பெற்றுக் கொண்டீர்; கடவுளாகிய ஆண்டவர் அங்கேதான் தங்கியிருப்பார்.
19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. (சேலா 
20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.
21 அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்; தம் தீய வழிகளில் துணிந்து நடப்போரின் மணிமுடியை நொறுக்குவார்.
22 என் தலைவர் 'பாசானிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்; ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன்.
23 அப்பொழுது, உன் கால்களை இரத்தத்தில் தோய்ப்பாய்; உன் நாய்கள் எதிரிகளிடம் தமக்குரிய பங்கைச் சுவைக்கும்' என்று சொன்னார். 
24 கடவுளே! நீர் பவனி செல்வதை, என் கடவுளும் அரசருமானவர் தூயகத்தில் பவனி செல்வதை, அனைவரும் கண்டனர்.
25 முன்னால் பாடகரும் பின்னால் இசைக்கருவிகளை வாசிப்போரும், நடுவில் தம்புரு வாசிக்கும் பெண்களும் சென்றனர்.
26 மாபெரும் சபை நடுவில் கடவுளைப் போற்றுங்கள்; இஸ்ரயேலர் கூட்டத்தில் ஆண்டவரை வாழ்த்துங்கள்.
27 அதோ! இளையவன் பென்யமின், அவர்களுக்கு முன்னே செல்கின்றான்; யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றார்கள்; செபுலோன் தலைவர்களும் நப்தலியின் தலைவர்களும் அங்குள்ளார்கள்.
28 கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்!
29 எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர்.
30 நாணலிடையே இருக்கும் விலங்கினைக் கண்டியும்; மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்; வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்; போர்வெறி கொண்ட மக்களினங்களைச் சிதறடியும்.
31 எகிப்திலிருந்து அரச தூதர் அங்கே வருவர்; கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர்.
32 உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். (சேலா)
33 வானங்களின்மேல், தொன்மைமிகு வானங்களின்மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில் தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார்.
34 கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்; அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது.
35 கடவுள் தம் தூயகங்களில் அஞ்சுவதற்கு உரியவராய் விளங்குகின்றார்; இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார்; கடவுள் போற்றி! போற்றி!

Holydivine