Psalms - Chapter 74
Holy Bible

1 கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது? 
2 பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக் கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த இனத்தாரை சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும். 
3 நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! ஏதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள். 
4 உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள். 
5 அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப்பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள். 
6 மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்;
7 அவர்கள் உமது தூயகத்திற்குத் தீ வைத்தார்கள்; தரைமட்டமாக்கினார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். 
8 "அவர்களை அடியோடு அழித்து விடுவோம்" என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டார்கள்; கடவுளின் சபையார் கூடும் இடங்களையெல்லாம் நாடெங்கும் எரித்தழித்தார்கள். 
9 எங்களுக்கு நீர் செய்து வந்த அருஞ்செயல்களை இப்போது நாங்கள் காண்பதில்லை; இறைவாக்கினரும் இல்லை; எவ்வளவு காலம் இந்நிலை நீடிக்குமென்று அறியக் கூடியவரும் எங்களிடையே இல்லை. 
10 கடவுளே! எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்? எதிரிகள் உமது பெயரை எப்போதுமா பழித்துக் கொண்டிருப்பார்கள்? 
11 உமது கையை ஏன் மடக்கிக் கொள்கின்றீர்? உமது வலக்கையை ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்? அதை நீட்டி அவர்களை அழித்துவிடும். 
12 கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர். 
13 நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்தீர்; நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலைகளை நசுக்கிவிட்டீர். 
14 லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரே; அதைக் காட்டு விலங்குகளுக்கு இரையாகக் கொடுத்தவர் நீரே;
15 ஊற்றுகளையும் ஓடைகளையும் பாய்ந்து வரச்செய்தவர் நீரே; என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்துபோகச் செய்தவரும் நீரே. 
16 பகலும் உமதே; இரவும் உமதே; கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே. 
17 பூவுலகின் எல்லைகளையெல்லாம் வரையறை செய்தீர்; கோடைக் காலத்தையும் மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர். 
18 ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும் மதிகெட்ட மக்கள் உமது பெயரைப் பழிப்பதையும் நினைத்துப்பாரும்! 
19 உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பொல்லாத விலங்கிடம் ஒப்புவித்து விடாதேயும்! சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை ஒரேயடியாக மறந்து விடாதேயும்! 
20 உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன. 
21 சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! 
22 கடவுளே! எழுந்துவாரும்; உமக்காக நீரே வழக்காடும்; மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும் இகழ்ச்சியை நினைத்துப்பாரும். 
23 உம்முடைய பகைவர் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்; உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும் அமளியைக் கேளும். 

Holydivine