Psalms - Chapter 71
Holy Bible

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். 
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. 
6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். 
7 பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்; நீரே எனக்கு உறுதியான அடைக்கலம். 
8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே. 
9 முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். 
10 ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே; என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்;
11 "கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை" என்று அவர்கள் சொல்கின்றார்கள். 
12 கடவுளே! என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் கடவுளே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 
13 என்னைப் பழிப்பவர்கள் வெட்கி அழிவார்களாக! எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை இழிவும் மானக்கேடும் சூழட்டும்! 
14 ஆனால், நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்; மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன். 
15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது. 
16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன். 
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். 
18 கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும் இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும். 
19 கடவுளே, உமது நீதி வானம் வரைக்கும் எட்டுகின்றது; மாபெரும் செயல்களை நீர் செய்திருக்கிறீர்; கடவுளே, உமக்கு நிகர் யார்? 
20 இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும் நான் காணுமாறு செய்த நீரே, எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்; பாதாளத்தினின்று என்னைத் தூக்கி விடுவீர். 
21 என் மேன்மையைப் பெருகச் செய்து மீண்டும் என்னைத் தேற்றுவீர். 
22 என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும் புகழ்வேன்; இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 
23 நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும். 
24 என் வாழ்நாளெல்லாம் என் நா உமது நீதியை எடுத்துரைக்கும். ஏனெனில் எனக்குத் தீங்குசெய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானக்கேடும் அடைந்து விட்டார்கள். 

Holydivine