Sirach - Chapter 16
Holy Bible

1 பயனற்ற பிள்ளைகள் பலரைப் பெற ஏங்காதே: இறைப்பற்றில்லாத மக்கள் பற்றி மகிழ்ச்சி கொள்ளாதே.
2 அவர்கள் பலராய் இருப்பினும் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் அவர்களிடம் இல்லையெனில் அவர்களால் மகிழ்ச்சி அடையாதே.
3 அவர்களின் நீடிய வாழ்வில் நம்பிக்கை வைக்காதே: அவர்களுடைய எண்ணிக்கையை நம்பியிராதே. ஓராயிரம் பிள்ளைகளைவிட ஒரே பிள்ளை சிறந்ததாய் இருக்கலாம்: இறைப்பற்றில்லாத பிள்ளைகளைப் பெறுவதைவிடப் பிள்ளையின்றி இறப்பது நலம்.
4 அறிவுக்கூர்மை படைத்த ஒருவர் ஒரு நகரையே மக்களால் நிரப்பக்கூடும்: ஒழுக்க வரம்பு அற்றோரின் ஒரு குலம் அதைச் சுடுகாடாக மாற்ற இயலும்.
5 இவைபோன்ற பலவற்றை என் கண் கண்டுள்ளது: இவற்றினும் பெரியனவற்றை என் காது கேட்டுள்ளது.
6 பாவிகளின் கூட்டத்தில் தீ கொழுந்துவிட்டு எரியும்: கட்டுப்பாடில்லா நாட்டில் சினம் பற்றியெரியும்.
7 தங்கள் வலிமைகொண்டு கிளர்ச்சி செய்த பழங்கால அரக்கர்களை ஆண்டவர் மன்னிக்கவில்லை.
8 லோத்து என்பவரை அடுத்து வாழ்ந்தவர்களை அவர் அழிக்காமல் விடவில்லை: அவர்களின் இறுமாப்பினால் அவர்களை வெறுத்தார்.
9 கேட்டிற்குரிய நாட்டின்மீது அவர் இரக்கம் காட்டவில்லை: தங்கள் பாவங்களால் அவர்கள் வேருடன் களைந்து எறியப்பட்டார்கள்.
10 தங்கள் பிடிவாதத்தால் திரண்டிரந்த ஆறு இலட்சம் காலாட்படையினரையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை.
11 பிடிவாதம் கொண்ட ஒருவர் இருந்திருந்தால்கூட அவர் தண்டனை பெறாது விடப்பட்டிருந்தால் அது வியப்பாக இருந்திருக்கும்! இரக்கமும் சினமும் ஆண்டவரிடம் உள்ளன. அவர் மன்னிப்பதில் வல்லவர்: தம் சினத்தைக் காட்டுவதிலும் வல்லவர்.
12 அவரின் இரக்கம் பெரிது: அவரது தண்டனை கடுமையானது. அவரவர் செயல்களுக்கு ஏற்ப அவர் மனிதருக்குத் தீர்ப்பளிக்கிறார்.
13 பாவிகள் தங்கள் கொள்ளைப் பொருள்களுடன் தப்பமாட்டார்கள். இறைப்பற்றுள்ளோரின் பொறுமை வீண்போகாது.
14 தருமங்கள் அனைத்தையும் அவர் குறித்து வைக்கிறார்: மனிதர் எல்லாரும் அவரவர் தம் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு பெறுவர்.
15 [ஆண்டவரைப் பார்வோன் அறிந்து கொள்ளாதவாறும் அதனால் அவருடைய செயல்களை உலகம் தெரிந்து கொள்ளாதவாறும் அவனுக்குப் பிடிவாதமுள்ள உள்ளத்தைக் கொடுத்தார்.]
16 படைப்பு முழுவதற்கும் அவர்தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார்: ஒளியையும் இருளையும் தூக்குநூல் கொண்டு பிரித்துவைத்தார். 
17 நான் ஆண்டவரிடமிருந்து ஒளிந்து கொள்வேன்: உயர் வானிலிருந்து யார் என்னை நினைப்பார்? இத்துணை பெரிய மக்கள் திரளில் என்னை யாருக்கும் தெரியாது: அளவற்ற படைப்பின் நடுவே நான் யார்? என்று சொல்லிக் கொள்ளாதே. 
18 இதோ! அவரது வருகையின்போது வானமும் வானகத்தின் மேல் உள்ள விண்ணகமும் கீழுலகும் மண்ணுலகும் நடுங்கும். 
19 அவரது பார்வைப் பட்டதும் மலைகளும் மண்ணுலகின் அடித்தளங்களும் அதிர்ந்து நடுங்குகின்றன. 
20 இவைபற்றி மனிதர் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவருடைய வழிகளை யாரே அறிவர்? 
21 புயலை யாரும் காண்பதில்லை: அவருடைய செயல்களுள் பல மறைந்துள்ளன. 
22 அவருடைய நீதியின் செயல்களை யாரால் அறிவிக்கமுடியும்? அவற்றுக்காக யார் காத்திருக்க முடியும்? அவரின் உடன்படிக்கை தொலைவில் உள்ளது. 
23 மேற்கூறியவை அறிவில்லாதவர்களின் எண்ணங்கள்: மதிகெட்ட, நெறிபிறழ்ந்த மனிதர்கள் மூடத்தனமானவற்றை நினைக்கிறார்கள். 
24 குழந்தாய், நான் சொல்வதைக் கேள்: அதனால் அறிவு பெறு: என் சொற்கள்மீது உன் கருத்தைச் செலுத்து. 
25 நற்பயிற்சியை உனக்கு நுட்பமாகக் கற்பிப்பேன்: அறிவை உனக்குச் செம்மையாய் புகட்டுவேன். 
26 தொடக்கத்தில் ஆண்டவர் தம் படைப்புகளை உண்டாக்கியபோது, பின்னர் அவற்றின் எல்லைகளை வரையறுத்தபோது, 
27 தம் படைப்புகளை என்றென்றைக்கும் ஒழுங்கோடு அமைத்தார்: அவற்றின் செயற்களங்களை எல்லாத் தலைமுறைகளுக்கும் வகுத்தார். அவற்றுக்குப் பசியுமில்லை, சோர்வுமில்லை: தங்கள் பணியிலிருந்து அவை தவறுவதுமில்லை.
28 அவற்றுள் ஒன்று மற்றொன்றை நெருங்குவதில்லை: அவரது சொல்லுக்கு அவை என்றுமே கீழ்ப்படியாமலில்லை.
29 அதன்பின் ஆண்டவர் மண்ணுலகை நோக்கினார்: அதைத் தம் நலன்களால் நிரப்பினார்.
30 நிலப்பரப்பை எல்லாவகை உயிரினங்களாலும் நிறைத்தார். அவை மண்ணுக்கே திரும்ப வேண்டும்.

Holydivine