Sirach - Chapter 48
Holy Bible

1 இறைவாக்கினர் எலியா நெருப்புபோல எழுந்தார்: தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது.
2 மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்: தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார்.
3 ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்: மும்முறை நெருப்பு விழச் செய்தார்.
4 எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?
5 இறந்தவரை உன்னத இறைவனின் சொல்லால் இறப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச்செய்தீர்.
6 மன்னர்களை அழிவுக்கு உட்படுத்தினீர்: மேன்மைமிக்கவர்களைப் படுத்த படுக்கையாக்கி வீழ்த்தினீர்.
7 கடுஞ் சொல்லைச் சீனாய் மலைமீதும் பழி வாங்கும் தீர்ப்பை ஓரேபு மலைமீதும் கேட்டீர்.
8 பழிதீர்க்கும்படி மன்னர்களைத் திருப்பொழிவு செய்தீர்: உம் வழித்தோன்றல்களாக இறைவாக்கினர்களை ஏற்படுத்தினீர்.
9 தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். 
10 ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. 
11 உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி. 
12 எலியா சூறாவளி சூழ மறைந்தார்: எலிசா அவருடைய ஆவியால் நிறைவுபெற்றார்: எலிசா தம் வாழ்நாளில் எந்தத் தலைவருக்கும் அஞ்சவில்லை: அவரை அடிபணிய வைக்க எவராலும் முடியவில்லை. 
13 அவரால் முடியாதது ஒன்றுமில்லை: இறந்த பிறகும் அவரது உடல் இறைவாக்கு உரைத்தது. 
14 அவர் தம் வாழ்நாளில் அரியன செய்தார்: இறப்பில் அவருடைய செயல்கள் வியப்புக்குரியனவாய் இருந்தன. 
15 இவை யாவும் கண்டும் மக்கள் மனம் மாறவில்லை. அவர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டு, மண்ணுலகெங்கும் சிதறடிக்கப்பட்டவரையிலும் தங்கள் பாவங்களை விட்டு விலகவில்லை. 
16 மக்களுள் சிலரும் தாவீதின் வீட்டைச் சேர்ந்த தலைவர்களும் காப்பாற்றப்பட்டனர்: அவர்களுள் சிலர் கடவுளுக்கு விருப்பமானதைச் செய்தனர்: வேறு சிலர் மேன்மேலும் பாவம் செய்தனர். 
17 எசேக்கியா தம் நகரை அரண் செய்து வலிமைப்படுத்தினார்: அதன் நடுவே தண்ணீர் கொண்டுவந்தார்: இரும்புக் கருவிகளைக் கொண்டு பாறையில் சுரங்க வழி அமைத்தார்: தண்ணீர்த் தொட்டிகளை அமைத்தார். 
18 அவருடைய ஆட்சிக் காலத்தில் சனகெரிபு படையெடுத்து வந்தான்: இரபிசாகேயை அனுப்பிவிட்டுப் பிரிந்து சென்றான். சீயோனை ஒரு கை பார்த்துவிடுவதாக அவன் சவால்விட்டான்: இறுமாப்பினால் பெருமை பாராட்டலானான். 
19 இஸ்ரயேலருடைய உள்ளங்களும் கைகளும் நடுங்கின. பேறுகாலப் பெண்களைப்போல் அவர்கள் துன்பம் அடைந்தார்கள்.
20 அவர்கள் இரக்கமுள்ள ஆண்டவரை நோக்கித் தங்கள் கைகளை விரித்து அவரைத் துணைக்கு அழைத்தார்கள். தூய இறைவன் விண்ணகத்திலிருந்து அவர்களுக்கு உடனே செவிசாய்த்தார்: எசாயா வழியாய் அவர்களை விடுவித்தார்.
21 அசீரியர்களுடைய பாசறையைத் தாக்கினார்: வானதூதர் அவர்களைத் துடைத்தழித்தார்.
22 ஆண்டவருக்கு விருப்பமானதை எசேக்கியா செய்தார்: பெரியவரும் காட்சிகளைக் கண்டவருமான நம்பிக்கைக்குரிய இறைவாக்கினர் எசாயா கட்டளையிட்டபடி எசேக்கியா தம் மூதாதையாகிய தாவீதின் நெறிகளில் உறுதியாக நின்றார்.
23 எசாயா காலத்தில் கதிரவன் பின் நோக்கிச் சென்றான். அவர் மன்னருடைய வாழ்வை நீடிக்கச் செய்தார்.
24 ஆவியின் ஏவதலால் இறுதியில் நிகழவிருப்பதைக் கண்டார்: சீயோனில் புலம்பியழுதவர்களைத் தேற்றினார்.
25 இறுதிக் காலம் வரை நிகழவிருப்பனவற்றையும் மறைந்திருப்பனவற்றையும் அவை நடப்பதற்குமுன்னரே வெளிப்படுத்தினார்.

Holydivine