Sirach - Chapter 50
Holy Bible

1 ஓனியாவின் மகன் சீமோன் தலைமைக் குருவாய்த் திகழ்ந்தார்: அவர் தம் வாழ்நாளில் ஆண்டவருடைய இல்லத்தைப் பழுதுபார்த்தார்: தமது காலத்தில் கோவிலை வலிமைப்படுத்தினார்.
2 அவர் உயரமான இரட்டைச் சுவருக்கு அடிக்கல் நாட்டினார்: கோவிலைச்சுற்றி உயர்ந்த சுவர் அணைகளை அமைத்தார்.
3 அவருடைய காலத்தில் நீர்த் துறை ஒன்று தோண்டப்பட்டது. அந்நீர்த்தேக்கம் கடலைப்போன்று பரந்தது.
4 தம் மக்களை அழிவினின்று காப்பாற்றக் கருத்தாயிருந்தார்: முற்றுகையை எதிர்த்து நிற்க நகரத்தை வலிமைப்படுத்தினார்.
5 திரையிட்டியிருந்த தூயகத்திலிருந்து அவர் வெளியே வந்த வேளையில் மக்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது எத்துணை மாட்சிமிக்கவராய்த் திகழ்ந்தார்!
6 முகில்களின் நடுவே தோன்றும் விடிவெள்ளி போன்று விளங்கினார்: விழாக் காலத்தில் தெரியும் முழு நிலவுபோல் ஒளி வீசினார்.
7 உன்னத இறைவனின் கோவிலுக்குமேல் ஒளிரும் கதிரவன் போலவும் மாட்சிமிகு முகில்களில் பளிச்சிடும் வானவில் போலவும் காணப்பட்டார்.
8 முதற்கனிகளின் காலத்தில் மலரும் ரோசாபோன்றும், நீரூற்றின் ஓரத்தில் அலரும் லீலி மலர்போன்றும் கோடைக்காலத்தில் தோன்றும் லெபனோனின் பசுந்தளிர்போன்றும் திகழ்ந்தார்.
9 தூபக் கிண்ணத்தில் இருக்கும் தீயும் சாம்பிராணியும் போலவும் எல்லாவகை விலையுயர்ந்த கற்களாலும் அணி செய்த பொற்கலத்தைப்போலவும் விளங்கினார்.
10 கனி செறிந்த ஒலிவ மரம்போலவும் முகிலை முட்டும் சைப்பிரசுமரம்போலவும் இருந்தார்.
11 அவர் மாட்சியின் ஆடை அணிந்து பெருமைக்குரிய அணிகலன்கள் புனைந்து தூய பலிபீடத்தில் ஏறியபோது திருஇடம் முழுவதையும் மாட்சிப்படுத்தினார்.
12 எரிபலி பீடத்தின் அருகே அவர் நிற்க, மற்றக் குருக்கள் மாலைபோல் அவரைச் சூழ்ந்து கொள்ள, அவர் அவர்களின் கைகளிலிருந்து பலியின் பாகத்தைப் பெற்றுக் கொண்டபோது, லெபனோனின் இளங் கேதுரு மரம்போல விளங்கினார். அவர்கள் பேரீச்சைமரம்போல் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.
13 ஆரோனின் மைந்தர்கள் எல்லாரும் தங்களது மாட்சியில் ஆண்டவருக்குரிய காணிக்கைகளைத் தங்கள் கைகளில் ஏந்தி இஸ்ரயேலின் சபை முழுவதற்கும் முன்பாக நின்றார்கள். 
14 சீமோன் பலிபீடப் பணிகளை முடித்துக்கொண்டு, எல்லாம் வல்ல உன்னத இறைவனுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கையை ஒழுங்குபடுத்தினார். 
15 பின் தமது கையை நீட்டிக் கிண்ணத்தை எடுத்தார்: திராட்சை இரசத்தை அதில் வார்த்தார்: பீடத்தின் அடியில் அதை ஊற்றினார். அது அனைத்திற்கும் மன்னரான உன்னதருக்கு உகந்த நறுமணப் பலியாய் அமைந்தது. 
16 அதன்பின் ஆரோனின் மைந்தர்கள் ஆர்ப்பரித்தார்கள்: வெள்ளியாலான எக்காளங்களை முழங்கினார்கள்: உன்னத இறைவனை நினைவுபடுத்தப் பேரொலி எழச் செய்தார்கள். 
17 எல்லா மக்களும் ஒன்றுசேர்ந்து விரைந்தார்கள்: தரையில் குப்புற விழுந்தார்கள்: எல்லாம் வல்ல உன்னத ஆண்டவரை வணங்கினார்கள். 
18 பாடகர்கள் தங்கள் குரல்களால் அவரைப் புகழ்ந்தார்கள்: அதன் பேரொலி இன்னிசையாய் எதிரொலித்தது.
19 ஆண்டவருக்குரிய வழிபாட்டுமுறை முடியும்வரை இரக்கமுள்ளவர் திருமுன் மக்கள் வேண்டினார்கள்: உன்னத ஆண்டவரை மன்றாடினார்கள். அதனோடு அவருடைய திருப்பணி நிறைவு பெற்றது.
20 ஆண்டவருடைய பெயரில் பெருமை கொள்ளவும் அவருடைய ஆசியைத் தம் வாயால் மொழியவும் சீமோன் இறங்கி வந்து இஸ்ரயேல் மக்களின் முழுச் சபைமீதும் தம் கைகளை உயர்த்தினார்.
21 உன்னத கடவுளிடமிருந்து ஆசி பெற்றுக்கொள்ள அவர்கள் மீண்டும் தலை தாழ்த்தி வணங்கினார்கள்.
22 இப்பொழுது அண்டத்தின் கடவுளைப் போற்றுங்கள்: எல்லா இடங்களிலும் அரியன பெரியன செய்பவரை, பிறப்பிலிருந்து நம் வாழ்வை மேன்மைப்படுத்துபவரை, தம் இரக்கத்திற்கு ஏற்ப நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள்.
23 அவர் நமக்கு மனமகிழ்ச்சியை அளிப்பாராக: இஸ்ரயேலில் முந்திய நாள்களில் இருந்ததுபோல நம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக.
24 அவருடைய இரக்கம் நம்முடன் என்றும் இருப்பதாக: நம் நாள்களில் அவர் நம்மை விடுவிப்பாராக.
25 இரண்டு வகை மக்களினத்தாரை என் உள்ளம் வெறுக்கிறது: மூன்றாம் வகையினர் மக்களினத்தாரே அல்ல.
26 அவர்கள்: சமாரியா மலைமீது வாழ்வோர், பெலிஸ்தியர், செக்கேமில் குடியிருக்கும் அறிவற்ற மக்கள்.
27 எருசலேம்வாழ் எலயாசரின் மகனான சீராக்கின் மைந்தர் ஏசுவாகிய நான் ஞானத்தை என் உள்ளத்திலிருந்து பொழிந்தேன்: கூர்மதியையும் அறிவாற்றலையும் தரும் நற்பயிற்சி அடங்கியுள்ள இந்நூலை எழுதியுள்ளேன்.
28 இவற்றில் ஈடுபாடு காட்டுவோர் பேறுபெற்றோர்: தம் உள்ளத்தில் இவற்றை இருத்துவோர் ஞானியர் ஆவர்.
29 இவற்றைக் கடைப்பிடிப்போர் அனைத்திலும் ஆற்றல் பெறுவர். ஆண்டவருடைய ஒளியே அவர்களுக்கு வழி.

Holydivine