Sirach - Chapter 17
Holy Bible

1 ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்: மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார்.
2 அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்: மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
3 தமக்கு உள்ளதைப்போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்: தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார்.
4 எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்: விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
5 [தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்: ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்: அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார்.]
6 விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். 
7 அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்: நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார். 
8 அவர்களின் உள்ளத்தைப்பற்றி விழிப்பாய் இருந்தார்: தம் செயல்களின் மேன்மையைக் காட்டினார். 
9 [தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.]
10 அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்: இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள். 
11 அறிவை அவர்களுக்கு வழங்கினார்: வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார். 
12 அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்: தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். 
13 அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன: அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன. 
14 எல்லாவகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள் என்று அவர் எச்சரித்தார்: அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். 
15 மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்: அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை. 
16 [இளமை தொட்டே அவர்களின் வழிகள் தீமையை நாடுகின்றன. தங்களின் கல்லான இதயத்தை உணர்ச்சியுள்ள இதயமாக மாற்ற அவர்களால் முடியாது.]
17 நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தினார்: இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின் பங்காகும். 
18 [இஸ்ரயேல் அவருடைய தலைப்பேறு. அதை நற்பயிற்சியில் வளர்க்கிறார்: அதன்மீது தம் அன்பின் ஒளியை வீசுகிறார்: அதைக் கவனியாது விட்டுவிடுவதில்லை.]
19 மனிதரின் செயல்கள் அனைத்தும் கதிரவனின் ஒளிபோல் அவர் திருமுன் தெளிவாய்த் துலங்குகின்றன: அவருடைய கண்கள் எப்போதும் அவர்களுடைய வழிகள் மீது இருக்கும். 
20 அவர்களுடைய அநீதியான செயல்கள் அவருக்கு மறைவாய் இருப்பதில்லை: அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார். 
21 [ஆண்டவர் நல்லவர்: அவர் தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை: மாறாகப் பாதுகாத்தார்.]
22 மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன: அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணிபோல் விளங்குகின்றன.
23 பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்: அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார்.
24 இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்: நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.
25 ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்: பாவங்களை விட்டு விலகுங்கள்: அவர் திருமுன் வேண்டுங்கள்: குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
26 உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்: அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்: அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள்.
27 வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்: ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்?
28 உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை: உடல் நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.
29 ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!
30 எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை: மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.
31 கதிரவனைவிட ஒளி மிக்கது எது? ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு. ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.
32 அவர் உயர் வானத்தின் படைகளை வகைப்படுத்துகிறார். மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.

Holydivine