Sirach - Chapter 31
Holy Bible

1 செல்வத்தின் மீதுள்ள விழிப்பு உடலை நலியச் செய்கிறது: அதைப்பற்றிய கவலை உறக்கத்தைத் துரத்தியடிக்கின்றது.
2 கவலை நிறைந்த விழிப்பு ஆழ்துயிலைக் கெடுக்கிறது: கொடிய நோய் உறக்கத்தைக் கலைக்கிறது.
3 செல்வம் திரட்டச் செல்வர் கடுமையாய் உழைக்கின்றனர்: தம் ஓய்வின்போது இன்பத்தில் திளைக்கின்றனர்.
4 ஏழைகள் கடுமையாய் உழைத்தும் வறுமையில் வாழ்கிறார்கள்: ஓய்வின்போது தேவையில் உழல்கிறார்கள்.
5 பொன்னை விரும்புவோர் நீதியைக் கடைப்பிடியார் மேன்மையை நாடுவோர் அதனாலேயே நெறி பிறழ்வர். 
6 பொன்னை முன்னிட்டப் பலர் அழிவுக்கு ஆளாயினர்: அவர்கள் அழிவை நேரில் எதிர்க்கொண்டனர்.
7 அதன்மீது பேராவல் கொள்வோருக்கு அது ஒரு தடைக்கல்: அறிவிலிகள் அனைவரும் அதனால் பிடிபடுவர்.
8 குற்றமில்லாது காணப்படும் செல்வர் பேறுபெற்றோர்: அவர்கள் பொன்னை நாடிப் போவதில்லை.
9 இத்தகையோர் யார்? அவர்களைப் பேறுபெற்றோர் எனலாம்: ஏனெனில் அவர்கள் தங்கள் மக்களிடையே வியக்கத் தக்கன செய்திருக்கிறார்கள்.
10 பொன்னால் சோதிக்கப்பட்டு நிறைவுள்ளவராய்க் காணப்பட்டோர் யார்? அவர்கள் அதிலே பெருமை கொள்ளட்டும். தவறு செய்யக்கூடிய சூழ்நிலை இருந்திருந்தும் தவறு செய்யாமல் விட்டவர் யார்? தீமை புரியக்கூடிய சூழ்நிலை இருந்திருந்தும் தீமை புரியாமல் விட்டவர் யார்?
11 இத்தகையோருடைய சொத்து நிலையாய் இருக்கும்: இஸ்ரயேலர் கூட்டம் அவர்களுடைய தருமங்களை எடுத்துரைக்கும்.
12 அறுசுவை விருந்து உன்னை அமர்ந்திருக்கிறாயா? அதன்மீது பேராசை கொள்ளாதே. நிறைய பண்டங்கள் உள்ளன என வியக்காதே.
13 பேராசை படைத்த கண் தீயது என நினைத்துக்கொள். கண்ணைவிடக் கெட்டது எது? அதனால்தான் எல்லாக் கண்களினின்றும் நீர் வடிகிறது.
14 காண்பவைமீதெல்லாம் கையை நீட்டாதே: பொது ஏனத்திலிருந்து உணவை எடுக்கும்போது அடுத்தவரை நெருக்காதே.
15 உனக்கு அடுத்திருப்பவரின் தேவைகளை உன்னுடையவற்றைக் கொண்டே அறிந்துகொள்: எல்லாவற்றிலும் அடுத்திருப்பவர்களைப்பற்றிக் கருத்தாய் இரு.
16 உனக்குமுன் வைக்கப்பட்டவற்றைப் பண்புள்ள மனிதர்போன்று சாப்பிடு: பேராசையோடு விழுங்காதே: இல்லையேல் நீ வெறுக்கப்படுவாய்.
17 நற்பயிற்சியை முன்னிட்டு உண்டு முடிப்பதில் முதல்வனாய் இரு: அளவு மீறி உண்ணாதே: இல்லையேல் அடுத்தவரைப் புண்படுத்துவாய்.
18 பலர் நடுவே நீ பந்தியில் அமர்ந்திருக்கும்போது மற்றவருக்குமுன் நீ உண்ணத்தொடங்காதே.
19 நற்பயிற்சி பெற்றோருக்கு சிறிது உணவே போதுமானது: படுத்திருக்கும்போது அவர்கள் அரும்பாடுபட்டு மூச்சுவிடமாட்டார்கள்.
20 அளவோடு உண்பதால் ஆழ்ந்த உறக்கம் வருகிறது: அவர்கள் வைகறையில் துயில் எழுகிறார்கள்: உயிரோட்டம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். தூக்கமின்மை, குமட்டல், கடும் வயிற்றுவலி ஆகியவை அளவின்றி உண்பவருக்கு உண்டாகும்.
21 மிகுதியாக உண்ணுமாறு நீ கட்டாயப்படுத்தப்பட்டால், இடையில் எழுந்துபோய் வாந்தியெடு: அது உனக்கு நலம் பயக்கும். 
22 குழந்தாய், நான் சொல்வதைக் கேள்: என்னைப் புறக்கணியாதே. கடைசியில் நான் சொல்வதன் பொருளைக் கண்டுணர்வாய். உன் செயல்கள் எல்லாவற்றிலும் சுறுசுறுப்பாய் இரு: அப்பொழுது எந்த நோயும் உன்னை அணுகாது.
23 தாராளமாக விருந்தோம்புவோரை மனிதர் புகழ்வர்: அவர்களுடைய ஈகைக்கு மானிடர் பகரும் சான்று நம்பத்தக்கது.
24 கஞ்சத்தனமாக உணவு படைப்போரைப்பற்றி நகரே குறைகூறும்: அவர்களுடைய கஞ்சத்தனத்திற்கு மனிதர் பகரும் சான்று முறையானது.
25 திராட்சை இரசம் அருந்துவதால் உன் ஆற்றலைக் காட்டமுயலாதே: திராட்சை இரசம் பலரை அழித்திருக்கிறது.
26 இரும்பின் உறுதியைச் சூளை பரிசோதிக்கின்றது: செருக்குற்றோரின் பூசல்களில் அவர்களின் உள்ளத்தைத் திராட்சை இரசம் பரிசோதிக்கின்றது. 
27 திராட்சை இரசத்தை அளவோடு குடிக்கின்றபோது அது மனிதருக்கு வாழ்வை அளிக்கின்றது. திராட்சை இரசம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை! மானிடரின் மகிழ்வுக்காக அது படைக்கப்பட்டது. 
28 உரிய நேரத்தில் அளவோடு அருந்தப்படும் திராட்சை இரசம் உள்ளத்திற்கு இன்பத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் அளிக்கிறது. 
29 அளவுக்குமீறி அருந்தப்படும் திராட்சை இரசம் சினத்தையும் பூசலையும் தூண்டிவிடுகிறது: மனக் கசப்பையும் விளைவிக்கிறது. 
30 அறிவிலிகள் தங்களுக்கே கேடுவிளைக்கும்படி குடிவெறி அவர்களின் சீற்றத்தைத் தூண்டிவிடுகிறது: அவர்களின் வலிமையைக் குறைக்கிறது: அவர்கள் காயம்பட நேரிடுகிறது.
31 திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் உனக்கு அடுத்திருப்பவரைக் கடிந்துக்கொள்ளாதே: அவர்கள் மகிழ்ந்திருக்கும்போது அவர்களை இகழாதே: அவர்களைப் பழித்துப் பேசாதே: கடனைத் திருப்பிக்கேட்டு அவர்களைத் தொல்லைப்படுத்தாதே.

Holydivine