Sirach - Chapter 19
Holy Bible

1 குடிகாரரான தொழிலாளர்கள் செல்வர்களாக முடியாது: சிறியவற்றை புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்.
2 மதுவும் மாதும் ஞானிகளை நெறிபிறழச் செய்யும்: விலைமாதரோடு உறவு கொள்வோர் அசட்டுத் துணிவு கொள்வர்.
3 அவர்களது உடல் அழிவுற, புழு தின்னும்: அசட்டுத் துணிவு கொண்டோர் விரைவில் எடுத்துக்கொள்ளப் பெறுவர்.
4 பிறரை எளிதில் நம்புவோர் கருத்து ஆழமற்றோர்: பாவம் செய்வோர் தங்களுக்கே தீங்கு இழைத்துக் கொள்கின்றனர்.
5 தீச்செயல்களில் மகிழ்ச்சி காண்போர் கண்டனத்திற்கு உள்ளாவர்.[இன்பங்களை மறுத்து வாழ்வோர் வாழ்வின் மணிமுடியைச் சூடிக்கொள்வர்.]
6 [தம் நாவை அடக்குவோர் பிணக்கின்றி வாழ்வர்.] புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள் குறையும். 
7 உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே: சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது.
8 நண்பராயினும் பகைவராயினும் அதைத் தெரிவிக்காதே: மறைப்பது உனக்குப் பாவமானாலொழிய அதை வெளிப்படுத்தாதே.
9 நீ கூறியதைக் கேட்டு உன்னைக் கவனித்தோர் காலம் வரும்போது உன்னை வெறுப்பர்.
10 எதையாவது நீ கேள்வியுற்றாயா? அது உன்னோடு மடியட்டும். துணிவுகொள்: எதுவும் உன்னை அசைக்கமுடியாது.
11 அறிவிலிகள் தாங்கள் கேட்டவற்றை வெளியிடாமல் இருப்பது அவர்களுக்குப் பேறுகாலத் துன்பம் போல் இருக்கும்.
12 தொடையில் அம்பு ஆழமாகப் பாயும்: அதுபோலப் புரளி அறிவிலிகளின் உள்ளத்தில் உறுத்தும்.
13 உன் நண்பர்கனைக் கேட்டுப்பார்: ஒருவேளை அவர்கள் ஒன்றும் செய்யாதிருக்கலாம். ஒருகால் அதைச் செய்திருந்தாலும் இனிமேலாவது செய்யாதிருப்பார்கள்.
14 அடுத்திருப்பவர்களைக் கேட்டுப்பார்: ஒருவேளை அவர்கள் ஒன்றும் சொல்லாதிருந்திருக்கலாம். ஒருகால் அவற்றைச் சொல்லியிருந்தாலும் மறுமுறை சொல்லாது விட்டுவிடுவார்கள்.
15 உன் நண்பர்களைக் கேட்டுப்பார்: நீ கேள்விப்பட்டது பொதுவாக அவதூறாக இருக்கும். எனவே கேட்பதையெல்லாம் நம்பிவிடாதே.
16 அறியாது சிலர் தவறலாம்: தம் நாவால் பாவம் செய்யாதோர் யார்?
17 உனக்கு அடுத்திருப்பவரை அச்சுறுத்துமுன் எச்சரிக்கை செய்: உன்னத இறைவனின் திருச்சட்டத்திற்கு உரிய இடம் கொடு.
18 [ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே அவரால் ஏற்றுக்கொள்ளப் படுவதன் தொடக்கம். ஞானம் அவருடைய அன்பைப் பெற்றுத் தருகிறது.]
19 [ஆண்டவருடைய சட்டங்கள் பற்றிய அறிவு வாழ்வு அளிக்கும் நற்பயிற்சியாகும்: அவருக்கு விருப்பமானதைச் செய்வோர் வாழ்வு அளிக்கும் மரத்தின் கனியைப் பெறுவர்.] 
20 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே முழு ஞானம்: முழு ஞானம் என்பது திருச்சட்டத்தின் நிறைவே.[அவரது எல்லாம் வல்ல தன்மை பற்றிய அறிவே. 
21 நீர் விரும்பவதைச் செய்யமாட்டேன் எனத் தன் தலைவரிடம் கூறும் அடிமை பின்பு அதைச் செய்தாலும் தனக்கு உணவு அளித்து வளர்க்கின்றவரின் சினத்தைத் தூண்டி விடுகிறான்.]
22 தீமைப்பற்றிய அறிவாற்றல் உண்மையான ஞானமன்று: பாவிகளின் அறிவுரையில் அறிவுத்திறனில்லை. 
23 அருவருக்கத்தக்க அறிவுடைமையும் உண்டு. ஞானம் இல்லாதோர் மூடராவர்.
24 அறிவுத்திறன் இருந்தும் திருச்சட்டத்தை மீறுவோரைவிட அறிவுக்கூர்மை இல்லாது போயினும் இறையச்சம் கொண்டோர் மேலானோர்.
25 தெளிந்த அறிவுடைமை இருந்தும் அது அநீதியானதாய் இருக்கலாம்: தீர்ப்பில் வெற்றி பெற நன்மைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வர்.
26 துயரில் முகவாட்டமுடன் திரியும் தீயவர்கள் உண்டு: அவர்கள் உள்ளத்தில் நிறைந்திருப்பதெல்லாம் வஞ்சகமே.
27 அவர்கள் கண்டும் காணாதவர்களாய் ஒன்றும் கேளாதவர்கள்போல் இருப்பார்கள்: அவர்களை யாரும் கவனிக்காத வேளையில் உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
28 வலிமைக் குறைவு பாவம் செய்வதினின்று அவர்களைத் தடுத்தாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்கள் தீங்கு செய்வார்கள்.
29 தோற்றத்தைக் கொண்டு மனிதரைக் கண்டு கொள்ளலாம். முதல் சந்திப்பிலேயே அறிவாளியைக் கண்டுகொள்ளலாம்.
30 ஒருவருடைய உடையும் மனமுவந்த சிரிப்பும் நடையும் அவர் எத்தகையவர் என்பதைக் காட்டிவிடும்.

Holydivine