Sirach - Chapter 27
Holy Bible

1 வருவாயைப் பெருக்குவதற்காகப் பலர் பாவம் புரிகின்றனர்: செல்வத்திற்காக அலைவோர் தங்கள் கண்களைத் திருப்பிக் கொள்கின்றனர்.
2 கற்களுக்கு இடையே உள்ள துளையில் முளை அடிக்கப்படுகிறது: விற்றல் வாங்கலுக்கு இடையே பாவம் நுழைந்துகொள்கிறது.
3 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தில் ஒருவன் உறுதியாய் நிலைத்திராவிட்டால் அவனது வீடு விரைவில் நிலைகுலைந்துவிடும்.
4 சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது: அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்துவிடுகின்றது.
5 குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது: மனிதரை, உரையாடல் பரிசோதிக்கப்படுகின்றது.
6 கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது: சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது.
7 ஒருவர் பேசுவதற்குமுன்பே அவரைப் புகழாதே: பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.
8 நீதிநெறியைப் பின்பற்றி நடந்தால் அதனை அடைந்து கொள்வாய்: மாட்சிமிகு நீண்ட ஆடையாக அதனை அணிந்துகொள்வாய்.
9 பறவைகள் தம்முடைய இனத்தோடு தங்குகின்றன: உண்மை அதனைக் கடைப்பிடிப்போரிடம் குடிகொள்ளும்.
10 இரைக்காகப் பதுங்கிச் சிங்கம் காத்திருக்கின்றது: தீமை செய்கிறவர்களுக்காகப் பாவம் காத்திருக்கின்றது.
11 இறைப்பற்றுள்ளோரின் பேச்சு எப்போதும் ஞானமுள்ளது: அறிவிலிகள் நிலவுபோல மாறுபடுவர்.
12 அறிவிலிகள் நடுவில் காலத்தை வீணாக்காதே: அறிவாளிகள் நடுவில் நிலைத்து நில்.
13 மூடரின் உரை வெறுக்கத்தக்கது: அவர்களின் சிரிப்பு பாவத்தைத் தூண்டவல்லது.
14 அடிக்கடி ஆணையிடுவோரின் பேச்சு மெய்சிலிர்க்கச் செய்கின்றது: அவர்களின் வாய்ச் சண்டை நம் காதுகளை மூடச் செய்கின்றது.
15 செருக்குற்றோரின் வாய்ச் சண்டை கொலைக்கு இட்டுச் செல்லும்: அவர்களின் வசைமொழி கேட்பது வருத்தத்திற்கு உரியது.
16 இரகசியங்களை வெளிப்படுத்துவோர் பிறருடைய நம்பிக்கையை இழக்கின்றனர்: ஆருயிர் நண்பர்களை அவர்கள் அடையமாட்டார்கள்.
17 நண்பருக்கு அன்புகாட்டு: அவர்கள்மீது நம்பிக்கை வை: அவர்களுடைய இரகசியங்களை நீ வெளிப்படுத்திவிட்டால் அவர்கள் பின் செல்லாதே.
18 ஏனெனில் ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்வதைப்போன்று நீ அடுத்திருப்பவரின் நட்பைக் கொன்றுவிட்டாய்.
19 உன் கையில் இருந்த பறவையை நழுவவிட்டதுபோல் அடுத்திருப்பவரைப் போகவிட்டு விட்டாய்: இனி நீ அவரைப் பிடிக்கமாட்டாய்.
20 அவரைத் தொடர்ந்து செல்லாதே: ஏனெனில் அவர் தொலைவில் சென்றுவிட்டார்: கண்ணியினின்று தப்பியோடும் மான்போல் ஓடிவிட்டார்.
21 காயத்துக்குக் கட்டுப்போடலாம்: வசைமொழியை மன்னிக்கலாம்: ஆனால் இரகசியங்களை வெளிப்படுத்துவோர் பிறருடைய நம்பிக்கையை இழக்கின்றனர்.
22 கண்ணால் சாடை காட்டுபவர்கள் தீச்செயலுக்குச் சூழ்ச்சி செய்கின்றார்கள். அதிலிருந்து யாரும் அவர்களைத் தடுக்கமுடியாது.
23 உன் கண்முன் அவர்கள் தேன் ஒழுகப் பேசுவார்கள்: உன் பேச்சைக் கேட்டு வியப்படைவார்கள்: பின்னால் அவர்களது பேச்சு மாறிவிடும்: உன் சொல்லைக் கொண்டே உன்னை இடறிவிழச் செய்வார்கள்.
24 பலவற்றை நான் வெறுத்திருக்கிறேன்: ஆனால் இவர்களை வெறுத்ததுபோல் வேறு எதனையும் வெறுத்ததில்லை. ஆண்டவரும் இவர்களை வெறுக்கின்றார்.
25 கல்லை மேலே எறிவோர் அதைத் தம் தலைமேலேயே எறிந்து கொள்கின்றனர்: நம்பிக்கைக் கேடு எனும் அடி காயங்களைப் புதுப்பிக்கும்.
26 குழி தோண்டுவோர் அதிலேயே விழுவர்: கண்ணி வைப்போர் அதிலேயே பிடிபடுவர்.
27 தீமை செய்வோரைத் தீமை திருப்பித் தாக்கும்: அது எங்கிருந்து வருகிறது என அவர்களுக்கே தெரியாது.
28 ஏளனமும் பழிச்சொல்லும் செருக்குற்றோருக்கு உரியவை: பழிக்குப்பழி அவர்களுக்காகச் சிங்கத்தைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறது.
29 இறைப்பற்றுள்ளோரின் வீழ்ச்சியில் மகிழ்வோர் கண்ணியின் பிடியில் சிக்குவர்: அவர்கள் இறக்குமுன் துயரமே. அவர்களைக் கொன்றுவிடும்.
30 வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை: பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள்.

Holydivine